Monday, April 1, 2013

நினைவுகள் - தொலைபேசி.

நினைவுகள் - தொலைபேசி.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு,போன் வாங்குலையா ? என்று கேட்பவர்களிடம் எல்லாம் என் அம்மா சொல்லும் பதில் " எங்களுக்கு என்ன ரிக் வண்டியா ஓடுது,போன் வேணுங்கிறதுக்கு ". எதாவது முக்கிய விஷயம் என்றால் பக்கத்துக்கு வீட்டுக்கு போன் வரும். அப்பொழுது என் சென்னை  சித்தப்பா ஒரு "செங்கல் போன்" வைத்து இருந்தார் .அதில் இருந்து தான் பக்கத்துக்கு வீட்டுக்கு கூப்பிடுவார் .இப்படி வரும் போனுக்கு இங்கும் பில் வரும் என்று யாரோ  கொளுத்தி போட்டனர் . இது இன்கமிங் கால் சார்ஜ் பற்றிய ஒரு தவறான புரிதல் . செல்போனுக்கு மட்டும் தான் அப்போது இன்கமிங் சார்ஜ் இருந்தது. அப்பொழுது இன்கமிங் கால் சார்ஜ் எல்லாம் யாருக்கு புரிஞ்சிருக்க போகுது.

சரி,நம்மளால் அடுத்தவங்களுக்கு  எதுக்கு சிரமம்,நாமளே  போன் வாங்கிடுவோம் என்று தான் போன் வாங்கினோம்.இதனோடு சேர்த்து பல தொல்லைகளையும்  வாங்கினோம். இந்த போன் பல நாளைக்கு வேலை செய்யாது ,அடிக்கடி கம்பி அந்து போயிரும்  ,கொர  கொரனு சத்தம் எல்லாம் வரும்.ஆனாலும்,இந்த போன் தான் எங்களுக்கு ஒரு தொடர்பு சாதனம் .பக்கத்துக்கு வீட்டுக்கும் அழைப்பு வரும் ,சில பேர் பணம் கொடுத்தும் போன் செய்வார்கள். முதலில் ஐந்து இழக்க எண்  தான் இருந்தது(60922),பிறகு ஆறு இலக்கமானது ( 260922).
ஆரம்பத்தில் வெளி ஊருக்கு  போன் செய்ய "8" போடா வேண்டும் ,பிறகு இது "91" ஆனது ,அப்புறம் "95" ஆனது .(இதுக்கும் இந்திய கோடு  91 க்கும் சம்மந்தம் இல்லை ).வெளிமாநிலம்,சென்னைக்கு எல்லாம் பூச்சியம்  போட வேண்டும் . அவசரமாக பேச லோக்கல் போனுக்கும்  "0" போட்டு STD பேசுவதாய் சிலர் சொல்வார்கள் .இதற்கு என்னே சார்ஜ்  வந்தது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த இணைப்பு எல்லாம் போஸ்ட் பெய்ட்  வகையை சார்ந்தது. ஆனால்  நாம் எத்தனை கால் பண்ணி இருக்கோம் ,எத்தனை மிச்சம் இருக்கு என்று எதுவும் தெரியாது .ஒரு குத்து மதிப்பாக பேச வேண்டியது தான் .சில நேரம் திடீர் என்று பில் அதிகமாக வரும் .இப்படி வர இரண்டு காரணங்கள்  சொல்லப்பட்டன.ஒன்று,கரண்டு திருடறது மாதிரி கம்பியில் கொக்கி போட்டு பேசிடுவாங்க .இரண்டு,டெலிபோன் exchange ஆபீஸ் ல ஒயர புடுங்கி வெளி நாட்டுக்கு பேசிடுவாங்க .இதை கண்டுபிடிக்க அழைப்பு எண் பட்டியல் வாங்கணும் .ஆனால்  இதை வாங்குறது எல்லாம் சாதாரண  காரியமே கிடையாது .
இதை தடுக்க நம்பர் லாக் என்று ஒன்று வந்தது.லோக்களுக்கு,STD க்கு என்று தனி தனியாய் லாக் பண்ணலாம் .நமக்கு பிடிச்ச ஒரு நாலு இழக்க எண்  போட்டு,லாக் செய்யணும் .எங்க வீட்ல லோக்கல் மட்டும் ஓபன்  செஞ்சுட்டு  மீதி எல்லாத்தையும் லாக் பண்ணிடுவோம் . அதனால் ,எப்ப STD  பேசணும்னா ,லாக்கை ஓபன் பண்ணி தான் பேசணும். தோராயமா ஒரு அஞ்சி நிமிஷம் ஆகும் .போன் முடிச்சவுடன் அதை மீண்டும் லாக் பண்ணும் . மீண்டும் ஒரு அஞ்சி நிமிஷம் ஆகும்.எனக்கு தெரிஞ்சு எல்லா வீட்டுலயும் வண்டி நம்பர் தான் ரகசிய எண் .இது திருடறவங்களுக்கும்  தெரிஞ்சி இருக்கலாம் :) .

எல்லா நம்பரையும்  ஒரு டைரில தான் எழுதி வைப்பாங்க. வழக்கமா போன் பண்ணும் நம்பர், std கோடு  எல்லாம் மனதிலேயே இருக்கும். பல நேரம் ராங் கால் வரும் . அப்புறம் திடீர்ன்னு ரிங் அடிக்கும் ,ஒரு ரிங்குல கட் ஆகும். லோக்கல் கால் என்றால்  ஒரு பெல் அடிக்கும்.STD என்றால் லாங் பெல் அடிக்கும்.


இரண்டு வருடத்திற்கு முன் போன் வேலையே செய்றது இல்ல,கட் பண்ணிடலாம் என்று அம்மா சொன்னபோது ,பரவாயில்லை  இருந்துட்டு போகட்டும் என்று சொல்லி ,கிராமப்புற prepaid திட்டத்துக்கு மாத்தினோம் .மாதம் ஐம்பது ரூபாய் என ஒரு வருடத்துக்கு கட்டி விட்டோம். இப்போவெல்லாம் முன்பு போல கம்பி கிடையாது.வீட்டு  வீதி வரைக்கும் கேபிள் தான்.ஆனாலும் முன்னை விட மோசமாய் தான் வேலை செய்தது. சென்ற வருடம் வீடு புதிப்பிக்கும் பணியில்,வேலையே செய்யாத இதற்கு என்று தனி பைப் ,இடமா என்று கருதி இணைப்பை துண்டிக்க முடிவு செய்தோம்.இணைப்பு துண்டிப்பு படிவத்தில் ,காரணமாய் "பழுது " என்று குறிப்பிட முடிவு செய்த போது ,"சார் ,ரிப்பேர்னு போடாதீங்க .சரி பண்ணறோம்னு  சொல்லிகிட்டே கட் பண்ணமாட்டாங்க " என்றார் அலுவலக ஊழியர் . அவர் சொன்னது உண்மையாகவும்  இருக்கலாம்.

சென்ற மாதம்  அடையாறுக்கு நண்பருடன் சென்றேன்.போகும் போது செல்போனை மறந்து விட்டு போய்விட்டேன்.ஒரு பக்கமும் STD  பூத்தை காணவில்லை,ஒரு ரூபாய் போனையும் காணவில்லை.  அவ்வளவு தான்,என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.நண்பரின் எண்ணும் தெரியவில்லை. கடைசியாய் வேறு வழியில்லை  என்று தெரிந்து "சார்,போன் மறந்துட்டு வந்துட்டேன் .ஒரு கால் பண்ணனும்" அப்படின்னு அஞ்சு பேர்கிட்ட பிச்சை எடுத்து ,அவனுங்க என்னை விட பிச்சைகாரனாக,balance  இல்லை என்று சொல்ல,ஆறாவதாக  ஒரு தர்ம பிரபு போன் குடுத்து உதவினார்.


நிழலின் அருமை வெயிலில் தெரியும்.