பொன்னுசாமி ஒரு விவசாய கூலி.அவருடைய அந்த வெள்ளைசட்டையையும், வேஷ்டியையும் முக்கிய விசேஷங்களுக்கு முட்டும் உடுத்தியிருப்பார், இப்போது மகனது கவுன்சிலிங்குக்காக.
கவுன்சிலிங் அறை முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்தது, அங்கே மேலும் சில வெள்ளை வேஷ்டிகள் ஆனால் அவை எல்லாமே விலையுயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். பெரும்பாலான மற்ற மாணவர்கள் புது பேண்ட், சர்ட் சகிதத்தில் நுனிநாக்கு ஆங்கிலம். ஆனால் முருகனோ அவனது காலின் கீழ்பகுதியை காட்டும் உயரம் பத்தாத பேண்ட், இரப்பர் செருப்பு மற்றும் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் தைக்கப்பட்ட வெளுத்துப்போன கலர் சட்டையுடன் மைக்கில் சொல்லும் ஆங்கிலத்தை அரைகுறையாய் புரிந்துகொண்டிருந்தான். முருகனின் அப்பா மற்ற மாணவர்களின் அப்பாக்களிடம் எந்த கல்லூரி நன்றாக இருக்கும் என தரவரிசை கேட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒரு தரவரிசை சொல்ல எந்த கல்லூரியில் மகனை சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்.
வரிசையாய் கல்லூரிகள் நிரம்பிகொண்டிருக்க பொன்னுசாமி இடைவிடாது அருகிலிருப்பவர்களை விசாரித்து மீதமுள்ள கல்லூரிகளின் தரவரிசையை மனதில் பதியவைத்துக்கொண்டிருந்தார்.மற்ற அப்பாக்கள் இரண்டு மூன்று பேராவது இவரை மனதில் திட்டியிருக்க வேண்டும், இடைவிடாது அவர்களை நச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வயது முதிர்ந்த அந்த மருத்துவதுறைகளின் இயக்குனர் டை, கோட் சகிதமாக கடக்க அவரை அறிந்தவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். பொன்னுசாமியும் மற்றவர்கள் ஏன் எழுந்தார்கள் என்பதுகூட அறியாமல் மரியாதைக்கு எழுந்து வைத்தார்.
சிறிதுநேரத்தில் அவர்களும் உள்ளே சென்று கல்லூரியை தேர்வு செய்யவேண்டிய கட்டாயம்.பொன்னுசாமிக்கு தரவரிசை மறந்துபோகவில்லை, இன்னும் பத்து மாணவர்கள் அடுத்தது நாம் என சிந்தனையுடன் அமர்ந்திருந்தார். திடீரென பொன்னுசாமியையும், முருகனையும் உள்ளே அழைக்க இருவரும் யார் நம்மை அழைப்பது எனகுழம்பி போனார்கள்.
அந்த முதிர்ந்த மருத்துவ இயக்குனர் தான் இவர்களை அழைத்திருந்தார். முருகனது ரேங்கை கேட்டு மீதமுள்ள கல்லூரிகளை வரிசையாய் அவரே ஒரு சீட்டில் எழுதி பொன்னுசாமியிடம் கொடுத்தார்.மீதமுள்ள கல்லூரிகளை இந்த வரிசைபடி தேர்ந்தெடுங்கள் என்றார்.
பொன்னுசாமிக்கு மிகவும் சந்தோசம், "ஆஹா என்ன ஒரு நல்ல குணம், என் போல் படிக்காதவர்களுக்கு முன்வந்து உதவி செய்வது!!" என கூறிவிட்டு, தான் மனதில் பதித்த கல்லூரிகளின் வரிசைகளை நீக்கிவிட்டு இயக்குனர் எழுதிகொடுத்த வரிசையில் முதல் கல்லூரியையே தேர்ந்தெடுத்துவிட்டார்.முருகனுக்கு அந்த இயக்குனர் முகம் ஏனோ ஆழப்பதிந்து போனது.அவனது மனநிலையில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும், பஸ்ஸில் ஊருக்கு கிளம்பியபோது அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு மிக நெருக்கமாய் அமர்ந்திருந்தான்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் தன்னுடைய தந்தையுடன் கல்லூரியில் நேர்முக தேர்வுக்கு போனபோது நடந்தவைகளை நினைவலைகளாய் யோசித்துக் கொண்டிருந்தார் மருத்துவ இயக்குனர் அவரது குளிரூட்டப்பட்ட அறையில்.
சூப்பர் !!
ReplyDelete--
உள்குத்து அல்ல, வெளிகுத்தே உள்ளது :) :)