Wednesday, March 23, 2011

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 2

முன்கதை:
ஒரு அரசியல்வாதி உருவான கதை - 1.

வோட்டு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து மதியம் 1 மணிக்கு முடிந்தே விட்டது.அண்ணனுக்கோ அதிர்ச்சி.அதே "இரண்டு" வோட்டுகள்.
அண்ணன் மலை போல நம்பிய "கிறுக்கு ராமசாமி",அண்ணனை ஏமாத்திட்டான்.யார் இந்த "கிறுக்கு ராமசாமி"? இவனிடம் தான் அண்ணன் 20 ருபாய் குடுத்து தனக்கு வோட்டு போட சொல்லி இருந்தார்.இவனை நம்பி தான் வோட்டு என்றதுக்கே அண்ணன் வந்தார்.

வோட்டு எண்ணிக்கை முடிஞ்சிருச்சு,ஏஜன்டு எல்லாம் கையெழுத்து போடுங்க என்றார் தேர்தல் அதிகாரி.
"செல்லா வோட்டுகளை மறுபடியும் சரி பாக்கணும்" என்றார் அண்ணன்.
"சார்,லீடிங் 350  மேல போய்டிச்சு ,இனி "வில் அம்பு"சின்னம்  தேறாது .செல்லா வோட்டே 67 தான்,நீங்க எந்த சின்னம்?" என்றார் அதிகாரி.
"நான் வாளி சின்னம்"
"வாளியா?,, கவுண்டிங் பார்த்த ஆபிசர்,மயக்கம் போடா குறையா,சார் மொத்த வோட்டே ரெண்டு தான் விழுந்திருக்கு,இதுக்கு ரீ கவுண்டிங் ஆ?"
"ஆமா சார் ,இது என் மான பிரச்சனை,மறுபடியும் பாருங்க"னார் அண்ணன்.
இந்த ஆளிடம் பேசி புரியோஜனம் இல்லை,இந்த 67 யை மறுபடி கூட்டி தொலைப்போம் என்று எண்ணி ,மறுபடியும் செல்லா வோட்டை சரி பார்த்தார் தேர்தல் அதிகாரி.
அண்ணனுக்கு லட்டு மாதிரி கிடைச்சது ஒரு வோட்டு சீட்டு,
"சார் இத பாருங்க ,எனக்கு விழுந்த வோட்டு".
அது அண்ணனுக்கு விழுந்த  வோட்டு என்று எல்லாம் சொல்ல முடியாது.பாதி மேலயும்,கீழயும் இருந்தது.உண்மையை சொல்லனும்னா,அது "செல்லா வோட்டு"
வெற்றி பெற்ற வேட்பாளரின் ஏஜன்டுகள்,சார்,சீக்கிரம் ரிசல்ட் காப்பி கொடுங்க என்று நச்சரிக்க,வேறு வழி இல்லாமல் வாளி சின்னத்தின் வோட்டு "மூன்று" ஆனது.

அண்ணன் தன் சபதத்தில் வெற்றி பெற்று விட்டார்.இந்த முடிவில் வருத்தம் அடைந்த ஒரே ஜீவன் "சின்ன பிள்ளை" தான்.


2006 .
அண்ணன் இந்த முறை எடுத்த முடிவு விபரீதமானது.சட்ட மன்ற தேர்தலில் போட்டி. இந்த முறை அண்ணன் சின்ன பிள்ளையிடம் சொல்லவே இல்லை.நேராக வேட்புமனு தாக்கல் செய்ய போனார். வேட்பு மனு தாக்கல் விதிகள் கடுமையாக்கப்பட்டு விட்டதால் விழி பிதுங்கி வாசலில் நின்றார்.

இந்த முறை நாம ஏமாற கூடாது,எப்படியும் ஒரு நாலு பேரு நம்ம ஆளுங்கள நிறுத்தி ,ஒரு நாலு பூத் ஏஜென்ட் செட் பண்ணுனா தான் கள்ள வோட்டை தடுக்க முடியும் என்று ஆலோசனையில் இருந்த எதிர்கட்சியின் பார்வையில் மாட்டினார் நம்ம அண்ணன்.
"ஆளு பாக்க ஒகே வா தான் இருக்கான் ,ஆனா ஓட்டை பிரிச்சுட போறான்யா? "சொன்னார் வேட்பாளர்.
"பிரச்சனையே இல்ல,நம்ம ஆளு தான்.எல்லாம் விசாரிசாச்சு,,ரெண்டு வோட்டுக்கு மேல ஒரு வோட்டு கூட வாங்க மாட்டார் " என்று ஒருவர் சொல்லி,அனைவரும் சிரிக்க,அண்ணனின் வேட்பு மனு ஒரு பைசா செலவு இல்லாமல் தாக்கல் ஆனது.

அண்ணனின் சின்னம் "மட்டை பந்து வீரர்",இவர்க்கு என்று தனியாக பூத் கமிட்டி எல்லாம் போடப்பட்டது.ஆனால்,இங்கு எதிர் கட்சிக்கு வாக்கு திரட்டும் பணிகள் துடிப்பாய்  நடந்தன.

இதை பார்த்த சின்னபிள்ளைக்கு ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது.சரி,இந்த கருமம் எல்லாம் எலெக்ஷன் முடிஞ்சா நின்னுரும் என்று பல்லை கடிச்சிக்கிட்டு, பொறுத்து கொண்டு இருந்தாள்.
 
தேர்தல் நாள் வந்தது:
இந்த முறை சின்ன பிள்ளையிடம் அண்ணன் வோட்டு கேட்கவில்லை.அவளும் போடவில்லை . தன்னையும் ஒரு மனுசனாக மதிச்சு, செலவு செஞ்சு, தேர்தலில் நிக்க வச்ச எதிர் கட்சி வேட்பாளருக்கே அண்ணன் வோட்டு போட்டார்.
அப்படியானால்,இந்த முறை அண்ணனின் வோட்டு "முட்டை" யா?

வோட்டு எண்ணும் நாளும் வந்தது:
அண்ணன் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்,6000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அண்ணனுக்கு கிடைச்ச வோட்டு எத்தனை?
மறுதினம் செய்தித்தாள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட செய்தி சுருக்கம் இது தான்
"..... சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ..... 6000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..சுயேட்சையாக போட்டியிட்ட பாண்டியன் என்பவர் 10,012 வாக்குகள் பெற்றது ..... வேட்பாளரின் தோல்விக்கு காரணமாய் அமைந்தது".

2011 :

ஒரு முன்னணி நாளிதழ் தேர்தல் கருத்து கணிப்பு:

"......திரு பாண்டியன் ....... கட்சியில் இணைந்து உள்ளார் .இவர்,சென்ற சட்டமன்ற தேர்தலில் "10,012" வாக்குகள்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..இதை அடுத்து இந்த தொகுதியில் ....கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.."


பெரியோர்களே,தாய்மார்களே ,வாக்காள பெருங்குடி மக்களே,
அண்ணன் "பாலிடிக்ஸ் பாண்டியன் " உங்களிடையே வாக்கு சேகரிக்க வந்து கொண்டு உள்ளார்..உங்களின் பொன்னான வோட்டு "................" சின்னத்துக்கே.

இவர் எப்படி 2006 தேர்தலில் 10,012 வாக்கு வாங்குனார்னு தெரியுமா?

2006 : தேர்தல் நாள்.

"தம்பி நான் எழுத படிக்க தெரியாதவன் தான்.ஆனா வோட்டு , கரெக்டா போட்ருவேன்..ஒண்ணாவது பட்டன் அவ்வளவு தானே?,,போட்டுடறேன்"என்று சென்ற பெரியவர் அழுத்திய பட்டன் "எண் - 16 - அண்ணன் பாண்டியனின் சின்னம்".




படிக்காதவங்களுக்கு எண் ஒன்று மேல இருந்து வராது..கீழே இருந்து தான் வரும்..  முதலில் அவங்க கைக்கு எந்த பட்டன் வருதோ அது தான் நம்பர் "ஒன்று"


பெரியோர்களே,தாய்மார்களே பிடிச்சு இருந்தா எனக்காவது "இன்ட்லி  " வோட்டு போடுங்க.

Tuesday, March 22, 2011

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 1.


நாமக்கல் மாவட்டம்,கரிச்சிபாளையத்தில பாண்டியன்னு சொன்னா ஒருத்தருக்கும் தெரியாது."பாலிடிக்ஸ் பாண்டியன்னு" சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும்.
அப்படி, இவர் என்ன அரசியலில் சாதிச்சிடாருன்னு கேட்கறவங்களுக்கு தான் இந்த "வரலாறு".

வாழ்க்கையில ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்.அந்த மாதிரி, நம்ம அண்ணன் பாண்டியனுடைய கனவு, ஒரு தேர்தலில் வெற்றி பெறனும் அவ்வளவு தான்.அதுக்காக,இவரும்  நாலு முறை வார்டு மெம்பர்க்கு நின்னுருக்காரு.எல்லாம் தடவையும்,இவருக்கு கிடைச்ச வோட்டு என்னமோ ரெண்டு தான்.மொத முறை, இவரு  அம்மாவும் ,அப்புறம் மூணு முறை இவரு பொண்டாட்டி சின்னபிள்ளையும் போட்ட வோட்டு தான்,இந்த ரெண்டாவது வோட்டு.


அண்ணனின் அரசியல் வாழ்வின் ஆரம்பமே "பாட சாலை" தான்.
"எங்க பாண்டியனுக்கு வோட்டு போடறவங்க எல்லாம் கை தூக்குங்க" என்றார் டீச்சர்,,பச்,,
பத்தாம் வகுப்புல,லீடர் போஸ்டுக்கு நிக்க சொல்லி சண்முகதினால் தூண்டி விடப்பட்டு,முட்டை வோட்டுல அவமான பட்டு அரசியல் வாழ்வை துவக்கியவரு தான் அண்ணன்.

2001.

"இந்த தடவ நான் வார்டு மெம்பர்ல நிக்குல புள்ள" என்றான் பாண்டியன்.
"அப்பா,நல்ல குமாரசாமி, நான் உன்ன கும்புட்டது வீண் போகல சாமி,இந்த ஆளுக்கு இப்பவாச்சும் புத்தி வந்துச்சே" என்றாள் சின்னபிள்ளை.
"அது இல்ல புள்ள,இத்தன நாளா நானும் மெம்பர்ல நின்னுட்டேன்.அதான் ,இந்த தடவை பஞ்சாயத்து எலெக்ஷன்ல நிக்கலாம்னு இருக்கேன்  "
"அட பாவி மனுசா,இது வரைக்கும் உள்ளூர்ல நம்ப மானம் கப்பலேத்துனது பத்தாதுனு, அய்யா துரை  ,இப்ப கிராமம் முழுக்க மானம் கெட்டு நிக்க போறியா?,ஏன் இப்படி தல புழுப்புல ஆடுற?.ஐயோ இந்த கொடுமைய நான் எங்கன போய் சொல்லுவேன்.இதா,இங்க பாரு,இந்த முறை மட்டும் எலெக்ஷன்ல ரெண்டு வோட்டுக்கு மேல வாங்கு,நான் இனிமே வாய மூடிகிட்டு இருக்கேன்.இல்ல, இந்த பொழப்ப இதோட விட்டுரு,ஆமா சொல்லிபுட்டேன்." என்று புலம்பினாள் சின்னபிள்ளை.
அம்மா அழாதமா,அழாதமா என்று அவளின் ரெண்டு பெண் குழந்தைகளின் ஆறுதலையும் பொருட்படுத்தாது நம்ம அண்ணன் "கிராம தலைவர்" பதவிக்கு நின்னார்.



வழக்கம் போல,இவரும் யாரையும் வோட்டு போட கேட்க வில்லை .முதல் முறை வார்டு மெம்பராய்  நின்ன போது கேட்டது.அப்புறம்,வோட்டு எண்ணுனதும் ஊரே சிரிச்சுது.
அடுத்த முறை நின்னதும்,தொடந்து நின்னதும், யாரும் இப்ப எல்லாம் நம்ம அண்ணனை ஒரு பொருட்டாய் என்றதே இல்ல.

"என்ன புள்ள நம்ம சின்னம் என்னனு தெரியும் இல்ல,"வாளி",கடைசி சின்னம் ,கரெக்டா போட்டுரு என்ன?" என்று சின்னபிள்ளையிடம் சொன்னான் பாண்டியன் 
"போடுறேன்,போடுறேன்,ஆமா அப்புறம்  நீயும் அந்த மூணு வோட்டை மறந்துறாத.அதுக்கு அப்புறம் இருக்குது உனக்கு, வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறுன கதை "

என்ன தான் சண்டை போட்டாலும்,கட்டுன புருசனுக்கே வோட்டு போட்டாள் சின்னபிள்ளை.

வோட்டு எண்ணும் நாளும் வந்தது.
வழக்கமாய் நம்ம அண்ணன் வோட்டு எண்ணும் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டார்.ஆனா இந்த முறை தன்னோட பொண்டாட்டிகிட்ட போட்ட சண்டைக்காக வோட்டு எண்ணும் சாவடிக்கு போனார்.பின்ன?,இது அண்ணனின் 25 வருட அரசியல் வாழ்விற்கு விடப்பட்ட சவால்.

"யாருங்க நீங்க?,5000  வோட்டு 50,000  வோட்டு என்ற கட்சி ஏஜன்டே வல்ல,அதுக்குள்ள 7 மணிக்கே வந்துடிங்க?" என்றார் வாட்ச்மன்.
"நான்,கோலாரம் பஞ்சாயத்து எலெக்ஷன்ல நின்ருக்கேன். அதான் " என்றார் அண்ணன்.
"உங்க ஊருல,ரெண்டு  பொம்பளைங்க இடையே தான போட்டின்னு பேசிகிட்டாங்க" என்றார் வாட்ச்மன்.
"ஆமாமா ,இதுவும் ஒரு பொம்பளைக்கும் எனக்கும் இருக்குற போட்டி தான் " என்றார் அண்ணன்.

வழக்கமாய் இதை எதுவும்,கண்டுக்காத சின்னபிள்ளை,இந்த முறை வோட்டு எண்ணிக்கையை எதிர் பார்த்தாள்.இப்பவும்,இந்த ஆளு ரெண்டு வோட்டு தான் வாங்கும்,இனி எலெக்ஷன்ல நிக்காது என்று திடமாய் நம்பினாள்..அண்ணனே வந்து வோட்டு எண்ணிக்கையை சொன்னால் தான் உண்டு..

என்ன ஆச்சு அண்ணனின் அரசியல் வாழ்வு? 

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 2.

பெரியோர்களே,தாய்மார்களே பிடிச்சு இருந்தா எனக்காவது "இன்ட்லி" வோட்டு போடுங்க.