Showing posts with label உண்மையின் தழுவல்கள். Show all posts
Showing posts with label உண்மையின் தழுவல்கள். Show all posts

Wednesday, May 4, 2011

மென்பொருள் நிறுவன வளாக தேர்வு - வழிகளும்,வலிகளும் - 1

2007

எப்படியோ இந்த M 3 (maths - 3 ) பேப்பரை பாஸ் பண்ணிட்டேன்..maths - 3 இல் "arrear" (பெயில் ) இல்லாமல் பாஸ் பண்ண,போன ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் அல்லது ஒழுங்காய் படித்து இருக்கு வேண்டும் .இனிமேல்  நானும் வளாக தேர்வுக்கு போலாம்.முக்கியமாய் வகுப்புக்கு கட் அடிக்கலாம்.
 
இப்ப எல்லாம் டீ கடைல டீ போடுறதுக்கு கூட இன்ஜீனியர் படிப்பை ஒரு பொருட்டா மதிக்கறதே இல்லை. கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பதிலா,பாஸ் ஆனவங்க எல்லாம் இன்ஜீனியர் படிக்கலாம்னு மாத்தியதின் விளைவு,கணக்கில் அடங்கா  இன்ஜீனியர்கள். நானே ஒரு இன்ஜீனியர்.இதில் இருந்தே,இக்கால இன்ஜீனியர்களின் தரத்தை நீங்கள் உணரலாம். இந்த கணக்கில் அடங்கா அனைவரையும் "personal interview"  வைப்பது என்பது இயலாத காரியம்.அதனால் தரம் குறைந்த  இன்ஜீனியர்களை  களை எடுக்கும் வழிகள் தான் பல கட்டங்கள் ,மாணவர்களை பொறுத்தவரை பல கண்டங்கள்.

இதோ வந்துருச்சு முதல் வளாக தேர்வு
"Placement coordinator " (இவர் தான் இந்த தேர்வுகளை எல்லாம் ஏற்பாடு  பண்றவர்,கண்காணிக்கறவர்) அறிவிக்கறார் ,இந்த வளாக தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள்,
1 ."no standing arrears "( தற்பொழுது எல்லா பாடத்திலும் பாஸ் பண்ணி இருக்கணும்,எத்தனை முறை எழுதினோம் என்பது கணக்கில் வராது..இன்னொன்னு இருக்கு "no history of arrears ",வரலாறில் பெயிலே ஆகி இருக்க கூடாது...சீ சீ இந்த பழம் புளிக்கும் )
2 . பத்தாவது மற்றும் பனிரெண்டாவதில்  60 % மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்..(பத்தாவதுல ஊர சுத்திட்டு 290 (58 %) மார்க் வாங்கிருந்தா காலி தான்.நல்ல வேலை நான் அப்படி பண்ணுல..பனிரெண்டாவதில பண்ணுனேன்,ஆனா 75 %  தண்டி தப்புச்சிடேன்)




முதல் வெற்றி,நான் இந்த தேர்விற்கு செல்ல தகுதி பெற்று விட்டேன்..ஹையா ஜாலி..ஆனா இதுக்கு இது எல்லாம் வேணுமாம்.."formal shirt -பண்ட" (காலர் வச்சது,பூ-பொம்மை  போடாதது,முழு கை),"shoe ,shocks".(நம்ம பசங்க பல பேரு "shoe " மட்டும் தான் போடுவாங்க),,பெல்ட்(பக்கில்சுல பந்தா இல்லாமல்,கோடு போடாமல்),,டை(அதை கட்டுவது தான் கொடுமை),,எல்லாத்தையும் விட கொடுமை "resume (எ) curriculum  vitae ",(உங்களின் படிப்பு ஜாதகம்),அப்புறம் சிரிச்ச மாதிரி நாலு போட்டோ..
சரி விடு,,அடுத்த "interview " ல பாத்துக்கலாம் னு இத "deal " ல விட முடிவு பண்ணினோம்(நல்லதுக்கும்,கேட்டதுக்கும் நாலு  பேரு இருப்பாங்க இல்ல?).

இது ஒரு வெளி வளாக தேர்வு(அதாவது வேற ஒரு  காலேஜ் ல  நடக்கும்,நாம போய் கலந்துக்கணும்)..இது தான் மகிழ்ச்சியான செய்தியே..உள் வளாக தேர்வுனா,நம்மளை கட் அடிக்க விட மாட்டாங்க..ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை "attendance"  போட சொல்லுவாங்க.

வெற்றிகரமாய் முதல் கட்டம்,aptitude test ,,நாலு விடை இருக்கும் ,,நமக்கு பிடிச்சதை எடுத்துக்கலாம்..ஆனா இதிலும் சில ஏழரை இருக்கு.தப்பான பதிலுக்கு மார்க்கை குறைக்கிறது(negative marks )  ..அப்படினா எனக்கு  முட்டை மார்க்குக்கு  கம்மியா தான் வருமே?,,எப்படியோ முட்டை கிடையாது.



முதல் பக்கத்தில்  நிரப்ப சொல்லி பல கட்டங்கள்  இருந்துச்சு.எல்லாத்தையும் நிரப்பிட்டு பார்த்தா,புகைப்படம் ஒட்ட சொல்லி இருந்துச்சு..நாலு போட்டோ நாப்பது ரூபாய்க்கு எடுத்து,இதுக்கு எதுக்கு வேஸ்ட் பண்ணிட்டுனு ஒட்டவே இல்லை.படிப்பு ஜாதகம்(cv) வேற இல்லை ..கடைசியாய் புகைப்படம் ஓட்டாதவர்கள் விடைகள் திருத்தப்படாது என்றார் தேர்வு கண்காணிப்பாளர்.. அது ஒழுங்கா எழுதுனவனுக்கு,எனக்கு இல்ல.

வெளியில் வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது,போட்டோவ கலர் செராக்ஸ் எடுத்து கட் செய்து  தர கடை இருக்குதாம்.நாப்பது ரூபாய்க்கு - இருவது போட்டோ வருமாம்.ச்சே,இது தெரிஞ்சு இருந்த நம்ம அதிர்ஷ்டம் என்னனு பார்த்து இருக்கலாம்..ஒரு நல்ல விஷயம் என்னன்னா,முதல் கட்டத்தில் தேர்வு பெற்றவர்கள் பெயர்கள் மட்டும் தான் சொல்லுவார்கள்.யாருடைய மதிப்பெண்ணும் சொல்ல மாட்டார்கள்.தப்பிச்சேன்டா சாமி..வெளி ஊர்ல எனக்கு ஏற்பட வேண்டிய ஒரு பெருத்த அவமானம் தவிர்க்கப்பட்டது. எப்படியோ இந்த முறை படிப்பு ஜாதகம்(cv)ரெடி பண்ணிட்டேன்..தப்பு,தப்பு "copy " பண்ணிட்டேன்..அடுத்த தேர்வுல ஒரு கை பார்த்துடலாம்..


தொடரும்..


Monday, February 14, 2011

நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து

நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து 


காதல்,ஒரு அழகான சொல். காதல் செய்ய பணமோ,அழகோ,அறிவோ தேவை இல்லை.உண்மையை சொல்ல போனால், அறிவு சற்று கம்மியாக இருப்பது அதிக பலனை தரும்.காதலை நான் அனுபவித்தது இல்லை.அனுமானித்தது உண்டு.

எனக்கும் சில சமயங்களில் காதல் வரும்,உற்று நோக்கினால்(நோக்கினாள் அல்ல) அவை எல்லாம் உண்மையான காதல் அல்ல ,ஒரு affection (இனக்கவர்ச்சி) அவ்வளவு தான்.
ஏன்? காரணங்கள் எளிது,ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை பிடிக்கும் (அல்லது ) ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணை பிடிக்கும்.பெண் தோழிகள் என்று எடுத்து கொண்டால்,ஒரு நான்கு வரலாம்.அதுவும்,மாதத்திற்கு ஒரு முறை பேசுவேன் அல்லது அதுவும் பேச மாட்டேன். இவர்கள் அனைவரும்,என்னை மிக நீண்ட நாட்களாய் தெரிந்து(வருட கணக்கில்) ,பின் தோழி ஆனவர்கள்.

நான் ஏன் இப்படி ஆனேன்? நான் ஆணாதிக்க வெறி பிடித்தவனா?. ஆம் - இல்லை

உயர்நிலை  நாட்கள் - சிறு வயதில்,பள்ளி பருவத்தில் ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது(வழக்கமான கதை தான் ). கதாநாயகன் வந்தான்,கதாநாயகியை கவர்ந்தான்,நான் வில்லன் ஆனேன்.அது தோற்று போனதில் காதலின் எதிரி ஆனேன்.படிப்பில் முதல் இடம் (அல்லது முதல் மூன்று இடங்களுக்குள்) மற்றும் துணைக்கு என் அப்பா நான் படித்த பள்ளியின் ஆசிரியர்.இது போதாதா காதலின் எதிரியாக???

மேல் நிலை நாட்கள் - மேல் நிலை படிப்பிற்காக விடுதிக்கு போனேன்.அது ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.பொண்ணுங்க,பசங்க பாக்க கூடாது,பேசக்கூடாது னு சொன்னங்க.அவங்க சொன்னதில்,நான் பின்பற்றிய ஒரே கருத்து இது தான். பேச்சு போட்டியில்  (http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html ),பள்ளி எங்கும் என் புகழ் பரவி,மேலும் சில பல சித்து வேலைகள் செய்து,கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, படிப்பை மறந்து திரிந்த காலம்.இந்த காலங்களில் நான் இரண்டு பெண்களிடம் பேசி இருக்கிறேன். பேசியது இது தான்.உங்க ரெகார்ட் நோட் குடுங்க,மிஸ் மார்க்கை கூட்டி சரி பார்க்க சொன்னாங்க..அதற்கு மேல்,எதுவும் நியாபகம் இல்லை.

நான் பெரும்பாலும்,என் நெருங்கிய நண்பர்கள் உட்பட,வாங்க-போங்க என்று  தான் கூப்பிடுவேன்.இதை பலரும் விரும்புவது கிடையாது.

கல்லூரி நாட்கள் - பெண்களிடம் பேசியது குறைவு என்பதால்,ஒரு தயக்கம் இருந்தது.இதற்குள் எனது நண்பர்கள்,அனைத்து வாய்ப்பையும் அணைத்து விட்டார்கள். மேலும்,திருமலை என்ற பெயரால் ரோல் நம்பர் - 52 ,எந்த பெண்ணும் t ,u,v,w ,x ,y ,z  என்ற பெயரில் வராததால் 50 - 60  அனைவரும் மாணவர்கள்.
வழக்கம் போல,internal டெஸ்டில் 50 - 60 ரோல் நம்பர் ஆன  நாங்கள் எல்லாம் பெயில் ஆக,வந்தது வினை.நிறைய பேர் பெயில் ஆகி இருந்தாலும்,நாங்கள் மட்டும் ரவுடி கும்பல் எனப்படும் "v" குரூப் ஆனோம்.(50 - 60   ரோல் நம்பர் ல் , 7 மாணவர்கள் "v" யை ஆரம்பமாக கொண்டவர்கள்).எங்களை கண்டால் எல்லாரும் கதறுவார்கள்.நான் இந்த சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தேன்.இந்த சங்கம்,பகலில் சிங்கமாகவும்,இரவில் பெண்களின் செல் சங்கமம் ஆகவும்  இருந்தது,பின்னாளில் தான் தெரிய வந்தது.
இதனால் கல்லூரியில் என் காதல் "லேது,நகி ,இல்லை,மபி".

வேலை நாட்கள் -
ஒரு பெண் அதியசம் ஆக chat ல் வந்தது ,ஸ்கூல் பிரண்ட் என்றது.
அடுத்த நாள் காலை,"hi da " என்றது,நான் உடனே,"hi di " என்றேன்.அவ்வளவு தான் ,என்னை பிளாக் பண்ணிவிட்டது(block தான் ,blog அல்ல) .
நண்பனிடம்,கேட்டால்,ஐயோ,இதெல்லாம் பன்னப்பிடாது என்றான்.

இதை எல்லாம் படித்து விட்டு,ஒரு பேக்கு,சோடாபுட்டி கண்ணாடி,படிந்த எண்ணெய் போட்டு வாரிய தலை,தொள தொள சட்டை,பேண்ட்  என்று உருவம் செய்தால் ,அது தான் நான் - க. திருமலை. பாஸ்போர்ட்,விசா ,கிரெடிட் கார்டு,பான் கார்டு,லைசென்ஸ் என்று எல்லாவற்றிலும் தன் தமிழ் பெயரை முழுதாய் எழுதி, கையெழுத்து என்று சொல்லி,பலரை அலற (அழ) வைத்தவன்.

நான் காதல் வயப்படா காரணம்,


1 . பெண்களை மதிக்காமல் ,அதிகமாய் நக்கல் செய்வது.அதிகமான பேச்சு.
2 . பெண்களிடம் ம்,ம் என்று அரை மணி நேரம் சொல்ல ,பொறுமை இல்லாமை. சாப்டியா?,தூங்கினியா? என்றெல்லாம் சொல்லாதது.
3 . வாங்க,போங்க என்று நான் சொல்லுவதால்,நான் சின்னப்பையனாக ஆகி ,அவர்கள் அக்கா ஆவதாக எண்ணி அரண்டு போய் ஓடிப்போனது.
4 . ஜாதி பிரச்சனை - நான் பாட்டுக்கு,கல்யாணம் பண்ணி கொண்டு போனால் ,கிராமத்தில் இருக்கும் என் பெற்றோரை நேரடியாய் பாதிக்கும் என்று எண்ணியது.முக்கியமாய் ரெண்டு பக்கமும் அடி பின்னிடுவாங்க என்ற பயம்.
5 . ஹீரோ என்று எண்ணி பல செயல்கள் செய்து காமெடியன் ஆனது.
6 . சம வயது பெண்களிடம் பழக  அதிக வாய்ப்பு இல்லாமை.அக்கா,தங்கை இல்லாமை.வீட்டில் ஒரே பையன்-தனிக்காட்டு ராஜா எல்லாம் கிடையாது.
எங்கம்மாவிடம் - தினமும் அடி வாங்குவேன் சிறுசாய்,
அப்பாவிடம் - எப்பவாவது வாங்குவேன் பெருசாய் .


இப்படி எல்லாம் நான் காரணங்கள் சொன்னாலும்,உண்மை இது தான்.
எனக்கு காதலிக்க வாய்ப்பு வரவில்லை.வாய்ப்புகளை உருவாக்க தெரியவில்லை.

காதலிப்பவர்கள் காதலில் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

 நன்றி (love image )-  http://www.nkdreams.com/poems/?p=21

Saturday, October 30, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -spike இல்ல bike-தொடர்ச்சி (3)

என்னை பார்த்த வினோத் கண்ணன் அதிர்ச்சி அடைந்தான்.

"டேய், என்னடா spike யை எடுத்திட்ட? ஏன்டா? " என்றான் கண்ணன்.
"என்னால முடியல,,அந்த முள் முடி ரெண்டு நாள் நேரா நின்னுச்சு,அப்புறம் கோணல்,மாணல் ஆயிடிச்சு..
அதான் அந்த கிரீம் எல்லாம் போட்டும் கூட ,ரெண்டு மணி நேரம் மேல  நிக்க மாட்டேன்கிறது.பாவம்டா பசங்க,இதை வச்சி எப்படித்தான் பொழப்ப ஒட்டுறாங்களோ,,அப்பா..
வேற ஐடியா சொல்லுடா " என்றேன்.
"இருக்கு,கவலைபடாதே "என்றான்.

என்ன ஐடியா?

spike இல்ல bike

"பைக் இருக்கா?"என்றான்
"இருக்கே."
"என்ன பைக்?"
"டிவிஎஸ் ஸ்டார்"
"ஸ்டார் சிட்டி னா ஒகே,ட்ரை பண்ணலாம்"
"மச்சான்,ஸ்டார் சிட்டி இல்ல,,வெறும் ஸ்டார்,,புல்லெட் வண்டி மாதிரி இருக்குமே அது,,ஓகே வா? "
"வெளங்கிடும்,,டேய் ,யூத் ஓட்ற வண்டியாடா அது? "
"ஏன்?அதுக்கென்ன குறைச்சல்,நல்லா தானே இருக்கு."என்றேன்.
"வெங்காயம்,,அவன்,அவன் pulsar ,apache ,yamaha ,,னு சுத்தறான்,நீ சுத்த வேஸ்ட், "
"ஏன்?அந்த பைக்ல எல்லாம்  அப்படி என்னதான் ஸ்பெஷல்?"
"இருக்கே,அந்த பைக்ல back seat எல்லாம் எப்படி இருக்கும்னு பாத்து இருக்கிறியா?பழனி படிக்கட்டு மாதிரி நெத்து குத்தலா இருக்கும்,யாராவது பின்னாடி உட்காந்தா,முன்னாடி இருக்கிறவன் மேல முழுசா சாஞ்சு விழுவாங்க,,இது போதாதா?,,அப்புறம் போதா குறைக்கு,ரோடு குழி,டிராபிக் னு பல வசதிகள் வேற நம்ம சென்னைல..நீயும்,வண்டி வச்சிருக்கிற பாரு,பை பாஸ் ரோடு மாதிரி."
"ஒண்ணும் புரியலையே"என்றேன்.

ஆராய்ச்சியின் விளக்க படங்கள்








கொஞ்சம் யோசித்து பார்த்தேன்,உண்மை விளங்கியது.

Friday, August 27, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -முள்ளம்பன்றியின் முடிவு - தொடர்ச்சி ( 2 )

முன்கதை:
http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html

முன்கதை சுருக்கம்:

சென்னைக்கு வந்த கிராமத்து மாணவன்,பெண்கள் தன்னை மதிக்காமல்-மிதிப்பது எண்ணி வருந்தி,தன் நண்பனிடம் ஆலோசனை கேட்கிறான்.
நண்பன் முதலாவதாக சொன்ன அறிவுரை,சிகை அலங்காரம்(அலங்கோலம் என்றும் சொல்லலாம்,தப்பில்லை).

தொடர்ச்சி:


"டேய்,வினோத்கன்னா,இந்த spike (முள்ளு முடி (எ) முள்ளம்பன்றி ) ஒரு மாதிரி தலை அரிக்கற மாதிரி இருக்குடா,என்ன பண்ண?"
"சும்மா வாடா,,அதெல்லாம் சரியா போய்டும்"
"எனக்கு வேற பயமா இருக்குடா,என் வீட்டு ஓனர் இத பாத்தா என்ன நினைப்பார்னே  தெரியல?,உனக்கு ஒன்னு தெரியுமா?,
அவருக்கு ரெண்டு பொண்ணுங்க,எந்த bachelor கும் வீடு கிடையாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா இருந்தார்,என்னை நம்பி தான் வீடே கொடுத்தார்,அதான்.."
"அவரு என்ன நினைச்சிருப்பாருனா,   உன்ன மாதிரி ஒரு மூஞ்சிய,எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுனு தைரியமா வீட்ட கொடுத்திருப்பாரு."
  "?"
ஒரு வேலை இவன் சொன்னது தான் உண்மையோ?,தெரியலை.


"டேய்,ரோட்ல எல்லோரும் என்னையே பாக்கிற  மாதிரி இருக்குடா."
"அதெல்லாம்,மன பிராந்தி,கண்டுக்காத மச்சான்,எப்படியோ சக்சஸ்,முடி செட் ஆயிடுச்சு."
"ஏன்டா,இந்த முள்ளம்பன்றி வச்சி இன்னும் அரை மணி நேரம் கூட ஆகல,அதுக்குள்ள?"

"மச்சா,அங்க பாரு அந்த ரெண்டு ஸ்கூல் பொண்ணுங்க,உன்னை பாத்து சிரிக்குது"
"ஏன்டா ,என்ன காலேஜ் பொண்ணுங்க கிட்ட ஹீரோ ஆக்குடானு சொன்னா,,நீ என்னை ஸ்கூல் பொண்ணுங்க கிட்ட காமடியன் ஆக்கிட்டியேடா பாவி,படுபாவி  ".
"கவலை படாத மாப்பு,,இது தான் பர்ஸ்ட் ,நெக்ஸ்ட் தான் பெஸ்ட்.!!! "






"ஆமா,இந்த ஸ்டைல் சரியா?இல்ல ஆப்பானு எப்படி கண்டு பிடிக்கறது?"
"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு,அந்த கடையில போய் வாழைப்பழம்  என்ன விலைனு  கேட்டுட்டு வந்திரு "
"எதுக்குடா?"
"சொன்னதை செய்,அப்புறம் சொல்றேன்"


கடையில்
"அண்ணா,பழம் எவ்வளவு?"
"4 ரூவா"
"வேண்டாம்."

"வினோத் கண்ணா,அந்த பழம் நாலு ரூபாய் யாம்டா,கொடுமை,நம்ப ஊர்ல இந்த விலைக்கு செவ்வாழை  பழமே வாங்கலாம்"
"மச்சான்,சக்சஸ் ,,,சக்சஸ் "
"என்னடா? அவன் பழம் நாலு ரூபாய் னு சொன்னதுக்கும்,சக்சஸ் க்கும் என்னடா சம்பந்தம்? "
"இருக்கு டா,இருக்கு..
மெட்ராஸ் ல  வாழபழம் விலை எப்படி தெரியுமா,, லுங்கி கட்டிக்கிட்டு போனா - 2.00, பேண்ட்டு போட்டுட்டு போனா - 2.50,
பேண்ட்டு போட்டுட்டு பைக்கில் போனா - 3.00 ,கார்ல போனா - 3.50,கம்பெனி ஐடி  கார்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைல்,கிருதாவோட போனா 4.00..உனக்கு 4  தான சொன்னாங்க,அப்ப நீ முன்னேறிட்ட. "

"நெசமா வாடா?,அப்புறம்,இந்த மாதிரி முடி வெட்டிகிட்டா மட்டும் பொண்ணு பாக்குமா?,ஏன்?,எதுக்கு?"
"அது ஒன்னும் இல்ல, இந்த மாதிரி  முடி வெட்டிக்க காரணமே,என்கிட்ட பணம் இருக்குனு பந்தா காட்டத்தான்..பல பொண்ணுங்களுக்கு என்ன தேவை.?செலவு பண்ண ஏமாந்து போனா நம்மள மாதிரி நாலு ஜீவன்,அவ்வளவு தானே,அதுக்கான சிக்னல் தான்,இந்த கட்டிங்"
"ஒஹ்,,அப்படியா சேதி ..ஆமாண்டா ..நம்ம ஊர்ல,ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருந்துகிட்டு,இங்க அரை குறை டிரஸ் போட்டுக்கிட்டு திரியுது"

"சரி,முடி ஓக்கே,அடுத்து ஐகிளாஸ் தான் மாத்தனும்"

"ஐயயோ,கண்ணாடி கழட்டின்னா,எனக்கு கண்ணு தெரியாதே?"
"அப்போ, லென்ஸ் போட்டுக்கோ"
"போடா வெண்ணை,அந்த லென்சை  காலை,மாலை ரெண்டு நேரமும் கழுவனும்,அப்புறம் கண்ண தேய்க்க கூடாதாம்,கசக்க  கூடாதாம்,ஏகப்பட்ட கண்டிஷன் வேற,எனக்கு அந்த கிரகம் வேண்டாம்."
"சரி விடு,fast track கிளாஸ் போட்டுடலாம்"


"எவ்ளோ விலை வரும்"
"என்ன கொஞ்சம் லோ ரேட்னா 2000 வரும் "
ஸ்...ப்பா..இப்பவே கண்ணை கட்டுதே.








Thursday, August 19, 2010

சென்னையில் ஒரு வெண்ணை

நம்மள எப்படி கிராமத்தான் னு கண்டுபிடிக்கறாங்கனே தெரியல?.


அதனால ஒரு ஆராய்ச்சியில் இருக்கேன்.என்ன ஆராய்ச்சி தெரியுமா?.ஏன் என்கிட்ட மட்டும் எந்த பொண்ணும் பேச மாட்டேங்கிதுன்னு .
இல்ல இல்ல ,பாக்கவே மாட்டேன்னு போகுதுன்னு.
நான் ஒன்னும் பாக்க ரொம்ப கொடுமையானவனும் கிடையாது. அப்புறம் ஏன்?.
என்ன விட மகா மட்டமான மடையன்கள் கூட மன்மதனா சுத்துறாங்க,ஆனா நான்- ஹ்ம் வேண்டாம்.
ஒரு பையன் ,முக்கியமா ஒரு பொண்ணும் நம்மள மதிக்கறதே இல்ல.

உண்மை அறிய,இதில் பலவித வெற்றி கண்ட வினோத் கண்ணனை நாடினேன்.
அவன் சொன்ன வழிமுறைகள்  எனக்கு வலி முறைகள் ஆகவே தெரியுது.என்ன செய்ய?,..கொஞ்சம்  முயன்று தான் பார்ப்போமே.

மாற்றம் - 1 ,முதல் கோணல் முற்றிலும் கோணல்.

டேய் என்னடா ஹேர் ஸ்டைல்  இது? 80 ல ஹிந்தி ஹீரோ வச்ச மாதிரி..change டா என்றான்.
எங்க ஊர்ல இப்படி  தண்டா  வெட்டுவாங்க.நான் என்ன பண்ண?,அதுவும் தலைக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சா நல்லதுன்னு பழகிட்டேன்டா.மாத்த முடியாதுடா.
போடா டுபுக்கு..மொதல்ல நான் சொல்ற மாதிரி செய்,அப்புறம் பாரு.

அவனே ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான்.கடை பேரு "கருப்பு-வெள்ளை".

கடைல ஒரு லிஸ்ட் படத்தை காட்டினாங்க,,உண்மைய சொல்லணும்னா ஒன்னு கூட நல்லாவே இல்ல.
எல்லாம் முடி வெட்டறப்ப பாதில ஓடி வந்தவனுங்க தலை மாதிரி இருந்துச்சு.

கடைசியா வேற வழியில்லாம "முள்ளம் பன்றி" யை செலக்ட் செஞ்சேன்.அது பேரு "spike". கொடும.
எங்க ஊரு ரவி பார்பர் இத பாத்தா,தொழிலையே விட்டுருவார்..அவ்வளவு மோசம்.


150 rs சார்,,ஐயோ,,நம்ம ஊருல ரெண்டு வருசத்துக்கே அவ்வளவு தானே..(10 *15 -150 ).ஆமா இப்படி குருவி கூடு மாதிரி நிக்குதே,எவ்வளவு நேரம் நிக்கும்,தலைக்கு குளிச்சா படுத்திறாது..
you should use hair gell da.

அப்ப தேங்கா எண்ணெய்?,ஊருல இருந்து ஆட்டி வந்தது இன்னும் அரை லிட்டர் இருக்கே?
அதை தூக்கி மொதல்ல வெளிய வீசு.
ஆமா,ஹேர் gell தெனமும் போடணுமா?
ஆமா ,daily two times .
அது எவ்ளோ விலை?.
என்ன,ஒரு fifty rs இருக்கும்.

ஐயோ,இப்ப புரிஞ்சு  போச்சு டா.
என்ன?
நம்ம சாப்ட்வேர் கம்பெனில எதுக்கு அதிகமா சம்பளம் தராங்கனு.
ஆமாடா,இதுக்கே தான்.

சரி,இன்னொரு சந்தேகம்,தலையில ஹெல்மெட் எப்படி போடுறது?
ஹெல்மெட் போட்டா hairstyle எப்படி தெரியும்.போடவே கூடாது.
இப்பவே தலை சுத்துதே.








தொடரும் ..


http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html#comments


Sunday, November 1, 2009

பிழை கொண்ட(கண்ட) பயணம்!

தமிழகத்தின் ஒரு முக்கிய மத்திய சிறைச்சாலை. வாரத்தில் ஒரு முறை எச். . வி நோயாளிகளை சிறையில் சென்று பார்ப்பது எனது பணி, நான் ஒரு எச். . வி க்கான மருத்துவன். என்னை யாரோ பின்னால் அழைத்த குரல் கேட்க என் எக்ஸ்பிரஸ் வேகத்தை குறைத்து நின்றேன், எங்கோ பார்த்த முகம் போலிருக்க அவரே அறிமுகமானார் இந்த சிறையின் ஆண் செவிலியர் என்று. என் மறதிக்கு மன்னிப்பு கேட்டு கொண்டிருக்க சிறை மருத்துவரும் வந்து சேர்ந்தார். என்னுடைய கிளினிக்கிற்கு எச்..வி பாதிக்கப்பட்ட காவலர் ஒருவரை அனுப்புவதாகவும் அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மச்சினன் என்றும் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர். சொன்னபடி வந்தார் அந்த காவலர் அவருக்கு தேவையான மருந்துகளை எழுதி கொடுத்தேன், கூடுதலாக அவரது மனைவியிடம் மட்டும் விசயத்தை சொல்லுவது அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் வந்தால் பக்க பலமாய் இருக்கும் என்றேன். சில நாட்களில் திரும்ப நல்ல முன்னேற்றத்துடன் வந்தார் ஆனால் மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. திரும்பவும் ஆலோசனை வழங்க அவராகவே மனைவியிடம் விசயத்தை சொல்லி விட்டார் .
விஷயம் அவரது மச்சினனான உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரிய குடும்ப மானமே பெரிதென எங்கோ அடைத்து வைத்தனர். என்னிடம் செல் போனில் தொடர்பு கொண்ட அவரது மனைவி அவரை குண படுத்த வேண்டுமெனவும் அவரது ஓரின சேர்க்கை குணம் மாற வேண்டும் என்றும் கேட்டார். அவரது வாழ் நாள் பிரச்சனையே இல்லை மற்றவர்களை போலவே வாழ்வார் ஆனால் ஓரினச்சேர்க்கை குணத்தை முழுமையாய் மற்ற முடியாது என்றேன் , அவசரமாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சில நாட்களில் என்னை தேடி இரண்டு காவலர்கள் மபிட்டியில் வந்து அவருக்கான மருந்துகளை பெற்று சென்றனர்-உயர் அதிகாரியின் கைகூலிகள். நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் மனமாற்றத்திர்க்காக வெளியூரில் வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். சில வாரங்களில் நோயாளி மோசமான நிலையில் இருப்பதாக சிறை செவிலியர் சொல்ல, காரணம் அவரது குடும்பத்தார் அவரை சிகிச்சை எடுக்க என்னிடம் அனுமதிக்காமல் அடைத்து வைத்தது அம்பலமானது. விஷயமறிந்து வீறு கொண்டு எழுந்து போராட, உதவிக்கு மற்றொரு எச்..வி பாதிக்கப்பட்ட காவலர் வர எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் போலீஸ் அதிகாரியை அணுகினோம். போலீஸ் அதிகாரியின் குடும்ப விசயமரிந்ததும் கை விரித்தார் நான் என்ன செய்யமுடியுமென்று. மனம் தளரவில்லை நாங்கள், செவிலியரின் உதவியுடன் அந்த நோயாளியின் வீட்டை அடைந்தோம். தனி வீடு- மனிதர் வாழும் அடையாளம் இல்லாது இருந்தது, ஒரே ஒரு கட்டில் அதன் கீழே தண்ணீர் சொம்பு மயான அமைதி,என்னை எமன் போல குடும்பத்தார் பாவித்தனர்.என் அழைப்பிற்கு திரும்பி பார்த்துவிட்டு பேச சக்தியின்று கண் சொருகினார் என்னை பிழை கொண்ட நோயாளி. குற்றுயிருடன் முனகி கிடக்கும் மனிதனை சிகிச்சைக்கு சேருங்கள் அவர் பிழைப்பது உறுதி என்றேன்,இல்லையேல் நாளை செய்தித்தாளில் இந்த விசயத்தை வெளியிடுவேன் என்றேன்.அவர்களோ குடும்பத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறோம் என்றனர்.
திடீரென நியாபகம் வந்தது என் அண்ணனது கொளிந்தியால் திருமணம், இரண்டு நாள் விடுப்பில் என் ஊர் செல்ல மறந்து போனேன் நியாய அநியாயங்களை. வாரங்கள் கழிய எங்கோ இருந்து ஒரு மருத்துவர் என்னை அழைத்து அதே நோயாளியை பற்றி விசாரித்தார், மேலும் அவர் தங்களது மருத்துவமனையில் இருந்து discharge செய்த போது நோயாளி நலமுடன் இருந்தார் என்றார். சிறை செவிலியரை செல் பேசியில் அழைக்க, நான் எடுத்த திருமண விடுப்பில் நோயாளி அவரது கஷ்டங்களிலிருந்து விடுபட்டார் என்பதே கடைசி செய்தி.
இப்படிக்கு
மானங்கெட்ட மருத்துவன்

பயணி : சிறுகதை - குட்டி

        பயணி : சிறுகதை - குட்டி (Published in யூத்ஃபுல் விகடன்)
- குட்டி


ந்த மருத்துவனுக்கு பொழுதுபோக்கு ஊர் சுற்றுவது. சில நாட்களாய் பயணங்கள் இல்லாமல் சோம்பேறி ஆகியிருந்தான்.
நினைவலைகள் சுழல... தன்னுடைய கேரளத்து நண்பர்கள் நினைவில் வர, தொலைபேசி உரையாடலின் முடிவாய் கேரளத்து பயணம் ஆரம்பமானது.
ஓணம் பண்டிகையும் அந்த பயணத்திலேயே இணைந்தது.
மாலை வேளையில் மழை தூரலுடன் திரிச்சூரை அடைய, வரவேற்பு அமர்க்களப்பட்டது.
அன்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், இருமடங்கு விலையில் வாங்கப்பட்ட மதுவுடன் இரவு கேளிக்கை இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடந்தது.
வாடகை வீட்டில் பட்ட படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படிக்கும் அவர்களுக்கு வழக்கமான மெஸ், ஒணத்தால் விடுமுறையில் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த மதுவுடன் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரை கள்ளுகடையில் இரண்டு பாட்டில் கள் குடித்தனர்.
ஊர் சுற்றிவிட்டு நல்ல உறக்கம் கண்ட பயணிக்கு காலை விடிந்ததும் உறைத்தது வந்ததிலிருந்தே நண்பர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது.
ஓணத்துகாக விடுமுறை என்பதால் ஊர் சென்று விட்டனரோ என வினவ, மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு வீட்டில் படித்துகொண்டிருப்பது தெரிந்தது.
மாநிலம் தாண்டி வந்து படிக்கும் நண்பர்களை, மாநிலம் தாண்டி வந்து கெடுப்பது உறைத்தது.
நண்பர்களை நன்கு படிக்குமாறு கூறிவிட்டு ஊர் திரும்பினார்.
சில நாட்கள் கழிய டெல்லி நண்பன் நினைவு வர, தொலைபேசி உரையாடலுடன் டெல்லி பயணம் ஆரம்பமானது..!

Friday, October 30, 2009

பச்சை நிற பக்கெட் - ஒரு உண்மையின் தழுவல்

2002 ம் அண்டு ஜூன் மாதம்..பதினொன்றாம் வகுப்பு ஆரம்பம்.
அப்பா என்னை விடுதியில்(Hostel) தான் சேர்த்து விட்டார்.இந்த விடுதி வாழ்க்கை ,புதிய நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.காலை எழுந்தவுடன் study hours ,அது முடிந்ததும்  குளிச்சிட்டு ஸ்கூல் கு கிளம்ப வேண்டியது தான் .அன்றும் வேகமாய் குளிக்க ஓடினேன்.பொது குளிலறைகள் என்பதால் சற்று நேரம் காக்க வேண்டி வரும் .மொத்தம் ஆறு குளியல் அறைகள்.எல்லாத்திலையும் தண்ணி சத்தம் கேட்க, ஓன்னு மட்டும் சும்மா சாத்தி  இருந்தது.திறந்து பார்த்தால்  ,எவனோ  பச்சை நிற பக்கெட் ஒன்றை முறைக்கு போட்டு விட்டு போய் இருந்தான் .அந்த பக்கெட்டை எடுத்து  வெளியில் போட்டு விட்டு ஆனந்தமாய் குளித்தேன்.வெளியில் வந்து பார்த்தால்.. தமிழ் ஐயா நின்னு கிட்டு இருந்தார் ,கையில்  பச்சை பக்கெட் உடன் .

இவரு பெரிய ராஜா  ,அவ்ளோ  அவசரமா? அப்படி அவசரமா  போய் என்னத்த கிழிக்க போற? போடா போ ..என்றார் தமிழ் ஐயா..தப்பு என் பேரில் இல்லை. எனக்கு கோவமாய் வந்தது.
டேய்,என்னடா இப்படி பண்ணிட்ட? என்றான்  ரமேஷ்.இருந்த கடுப்பில்,போடா.. அந்த ஆளு என்னத்த பண்ண போறான்..அந்த ஆள் தான் நம்ம class கே  வரது இல்ல .போடா என்றேன்.அந்த பாசக்கார பயபுள்ள,  அதை அப்படியே போய் அவரிடம் சொல்லி விட்டான் போல..
சாயங்காலம்.
என்ன ,நான் உங்க கிளாஸ் கு வரலை னா,எதுவும் பண்ண  முடியாதோ?practical marka போட போறான் ..சொன்னையா என்றார் தமிழ் அய்யா?..தலை குனிந்து நின்றேன்.நேரம் வரும், பார்த்துக்கிறேன் என்றார் அவர்.
மனதுக்குள்..அட துரோகி  ரமேஷ், practical மார்க் னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் சேர்த்து போட்டு தள்ளி விட்டாயே பாவி .பிறகு அந்த சம்பவத்தை மறந்தே போய் விட்டேன்.

ஆகஸ்ட் - 14 .ஸ்கூல் மீட்டிங் .
HM பேசுகிறார்,மாணவர்களே - நாளைய சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு "என்று தணியும் அடிமை தாகம் " என்ற தலைப்பில் 15 மாணவர்கள் பேச உள்ளார்கள் .அவர்களில் சிறப்பாய் பேசுபவர் நாளை சுதந்திர தின மேடையில்  பேசலாம் என்றார்.எல்லோரும் கை தட்டினார்கள்.
15 பேர் கொண்ட பட்டியலை வாசித்தார் தமிழ் அய்யா.ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்து முன்னாடி போய் மேடை பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.பெரும் அதிர்ச்சியாய் ,15 ஆக என் பெயர்.தெளிவாய் தெரிந்தது.தமிழ் அய்யா பலி வாங்கி விட்டார் .என்ன செய்வது என்றே தெரியலை..முன்னாடி போய் அமர்ந்தேன்.
மீண்டும் கை தட்டல்.

முதலாவதாய் ஒருத்தன் வந்தான் ,அவன் சொல்லி தான் தலைப்பே ஒழுங்காய்  தெரிந்தது.
"என்று தணியும் அடிமை தாகம். " எவன் தான் இப்படி எல்லாம் தலைப்பை எழுதி தரானோ தெரியல..இதுல போய் என்னத்த பேசுறது?முடிஞ்சது கதின்னு உக்காந்து இருந்தேன்.சங்க இலக்கியம்,பெண் அடிமை னு எதையோ பேசி கிட்டு இருந்தாங்க.நன்கு பேர் பேசி முடித்ததும் ஒரு முடிவுக்கு வந்தேன்.ஒழுங்கா பேசி ,நம்மை மாட்டிவிட்ட தமிழ் அய்யா மூஞ்சில கரி பூசனும்.
யோசித்தேன் ,எதுவும் தோன்ற வில்லை.எழுத பேனா எடுத்தேன்(Made in China ),கிடைத்தது ஒரு பாயிண்ட்.அந்த பாயிண்ட் இது தான் 'எல்லாரும் Made in china ,Made in USA  னு பெருமையா சொல்றோமே ,ஏன் யாரும் Made in India னு சொல்லறது இல்ல '.

அதுக்குள்ள 14 பேறும் பேசிட்டாங்க போல.நான் போனேன்.வணக்கம் சொல்லி ,எதையோ பேசினேன்.வழக்கம் போல ,மாணவர்கள் எல்லோரும் கொடுமையே னு கேட்டு கிட்டு இருந்தாங்க.சட்டென  யோசனை வந்துச்சு..அது என் வந்துச்சு னு தெரியலை..ஜவுளி கடை முன்னாடி விளம்பரம் 'Titanic saree'..பாயிண்ட் கிடைச்சுது (மிக பெரிய turning பாயிண்ட் னே சொல்லலாம்).
பேசினேன் .
"நம்ம ஊர்ல பொண்ணுங்க எல்லோரும் Titanic saree னு வெளி நாட்டு அடிமை மோகத்துல  saree வாங்கி கட்றாங்க ,ஆனா உண்மை என்னன்னா titanic  படத்துல கதாநாயகி saree கட்டுவதும் இல்ல,ஒன்னும் இல்லை னு "
மாணவர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.நான் மகிழ்ந்து போனேன்.ஆகா!!,நமக்குள்ள இவ்ளோ திறமை இருக்குது ..தெரியாம போச்சான்னு நினைச்சேன்.பெரும் கைதட்டலோடு இறங்கி வந்தேன்.

15 நிமிட இடைவேளைக்கு அப்புறம் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றார் தமிழ் அய்யா.
இரண்டு அடி வைப்பதிற்குள் ,HM கூப்பிடறார் என்றார் ,PT சார்.
பந்தாவாய் HM ஆபீஸ் போனேன் .கண்ணாடிய கழட்டுனார்.பளார்னு அறை விழுந்தது .எதிர்பார்க்காத அறை.ஆடி போய் நின்றேன்.
ஏன்டா,Titanic படத்துல Herione dress போட்டா உனக்கு என்ன ,போடலைனா உனக்கு என்ன ?அத மேடை ல வேற சொல்லுவியா? அறிவு இல்ல?என்றார்.
இல்ல சார் ,நான் சொல்ல வந்ததே வேற ,,saree  பத்தி தான் .
வாய மூடுடா ,என்றார்.யார் உன் பேர சேத்துனது, என்றார்?
தமிழ் அய்யா தான் வேணும்னே பேர போட்டுட்டார் என்றேன்.
அவரு போட்டா ?,எத்தன பேரு பாதியில் பேச முடியாம போன்னாங்க?நீயும் அப்படி போக வேண்டியது தானே?
போய் பேசாம உட்கார் என்றார் ,HM .உட்கார்ந்தேன்.

என் பேச்சின் அர்த்தம் மாறி போனதை உணர்ந்தேன்.அதுக்கு தான் கை தட்டுனாங்களா பசங்க?ஐயயோ....

தமிழ் அய்யா வாசிக்கிறார்,வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ,
பத்மநாபன் (பெண் அடிமை பேசியவன்),அன்ன பூரணி (என்ன பேசுச்சுனே எனக்கு தெரியாது).

பின் பக்கத்தில் ஒரே சலசலப்பு,நிறைய மாணவர்கள் எழுந்து சத்தம் போட்டார்கள்.தமிழ் மீடியம் மாணவர்களை வேண்டும் என்றே ஒதுக்கி விட்டதாய் சொன்னார்கள்.ஒருவன் சத்தமாய் என் பெயரை சொல்லி ,பரிசு தர வேண்டும் என்றான்.ஆசிரியரின் தடிக்கு பயந்து கும்பல் அமைதி ஆனது.
அட பாவிகளா!,நான் என்னடா பண்ணுனேன்.என் பெயரை சத்தமாய் சொன்ன அந்த துரோகி யார்?.ஒரு வேலை அந்த ரமேஷ் யாய் இருப்பானோ?போச்சு ,என் கதை இன்னிக்கு முடிஞ்சது.

 மீண்டும் HM ரூமுக்கு அழைப்பு வந்தது,இந்த முறை பயந்துகிட்டு  தான் போனேன்.
முடியை பிடித்தார் .என்னடா,நீ என்ன பெரிய ரவுடி யா ? உனக்கு கோஸ்டி வேற?
முதுகில் இரண்டு அடி விழுந்தது.இனிமேல் உன்ன பத்தி எதாவது எனக்கு தகவல் வந்தது அவ்வளவு தான்.போடா என்றார்.

உள்ள அடி வாங்கினதை யார் கிட்டயும் சொல்லல?HM நெறைய points பேசனும்னு சொன்னார்னு சமாளிச்சேன்.கம்முனு மேடை ஏறி வணக்கம் ,போட்டுட்டு வந்திருக்கலாம்.தேவை இல்லாம பேசி ,வம்ப விலைக்கு வாங்கினது தான் மிச்சம் .நைசா ஒருத்தண்ட Titanic படம் பத்தி விசாரிச்ச அப்புறம் தான் ,HM ஏன் அடிச்சாருன்னு நல்லா வெளுங்குச்சு..

அடுத்த நாள் காலை குளிக்க போனேன் ,கதவை திறந்தேன் .பச்சை நிற பக்கெட் இருந்தது.அன்று குளிக்கவே இல்லை.எனக்கு,ஒன்று மட்டும் புரியவே இல்லை.
 "என் பெயரை சத்தமாய் சொல்லி ,பரிசு தர வேண்டும் என்றானே? அவன் யார்?.அவன் எதிர்பார்த்த பரிசு தான் என்ன ?"
 




நல்லதோ ,கெட்டதோ நாலு வார்த்தையை comment ல போடுங்க.